டக்கு திசையிலிருக்கும் குளத்தின் தென்கிழக்கு மூலைதான் பாட்டியின் வசிப்பிடம். பல வருடங்களாக அங்குள்ள சுமைதாங்கிக் கல்லுக்கு அருகில் இருக்கக்கூடிய பாட்டியை நான் பார்ப்பதுண்டு. கோவிலுக்குச் செல்லும் பாதையாக இருந்த காரணத்தால்... பேருந்து நிலையத்திற்கும் மேற்கு திசை நடைக்கும் மம்மியூருக்கும் செல்வதற்கு வசதியாக இருந்த காரணத்தாலும் பெரும்பாலும் என்னுடைய பயணம் இந்த வழியில்தான்.

Advertisment

இங்கு இருந்தால், கோவிலின் பிரதான தீர்த்தக் குளமான வடக்கு திசையிலுள்ள குளத்திற்கும் அன்னதான கூடத்திற்கும் பகவதியின் சன்னிதானத்திற்கும் மேல்சாந்தி நீர்நிலைக்கும் ஆலயத்தின் பொன் தகட்டால் ஆன மேற் கூரைக்கும் பொன் கொடிமரத்திற்கும் பார்வைகள் தடைகளே இல்லாமல் பறந்து செல்லும் என்ற ஒரு சிறப்புத் தன்மை இருக்கிறது.

Advertisment

பாட்டி தன்னுடைய காலங்களை இந்த பகுதியில்தான் கழித்தாள். வயதான பிறகுதான் பாட்டியை யாரோ இங்கு கொண்டுவந்து விட்டிருக்கிறார்கள். யாரும் யாரையும் எப்போது வேண்டுமானாலும், இந்த கோவில் பகுதியில் கொண்டு வந்துவிடலாம். இங்கு கொண்டு வந்துவிட்டு விட்டால், பிறகு அந்த உயிரைப் பாதுகாப்பதற்கான பொறுப்பை பகவான் ஏற்றெடுத்துக் கொள்வார் என்பது பொதுவான நம்பிக்கை. அதற்குப் பிறகு திரும்பிப் பார்க்க வேண்டியதில்லை.

இவ்வாறு கொண்டுவந்து விடப்படும் உயிர்களில் மனிதர்கள் மட்டுமல்ல... பறவைகளும் மிருகங்களும் நீரில் வாழும் உயிர்களும் இருக்கின்றன. பசுக்களும் நாய்களும் ஆடும் மானும் மயிலும் முயலும் குரங்கும் முதலையும் ஆமையும் மீன்களும் கொண்டு தள்ளப்படும் இடமாக சர்வசாதாரணமாக கோவில் பகுதியில் வந்துசேர்கின்றன. ஆனால், இப்போது மனிதர்கள்தான் அதிகமாக வந்து சேர்கின்றனர்.

Advertisment

வாழ்க்கை அனாதையாக ஆக்கும்போது, யாருக்கும் தேவையில்லை என்ற நிலை உண்டாகும்போது, சொந்தமென கூறுவதற்கு யாருமே இல்லை என்ற நிலை உண்டாகும்போது, அனைவராலும் வெறுக்கப்படும் நிலை வந்து சேரும்போது, அனைத்தும் தகர்ந்து சாம்பலாகும்போது, உறவினர்களுக்கும் தேவைப்பட்ட நபர்களுக்கும் தேவையில்லை என்ற நிலை உண்டாகும்போது, உடல் நலம் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்போது... இனிமேல்... இங்கு... புனிதமான இந்த கோவிலுக்கு வந்துசேரும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அனாதைகளாக ஆன  மனிதர்களுக்கு இறுதியாக அபயம் அளிக்கக்கூடிய இடமாக பகவானின் ஆலயம் ஆகி விட்டிருக்கிறது. ஆலயத்தின் வருட வருமானம் லட்சத்திலிருந்து கோடிக்குக் குதித்து உயர்ந்து கொண்டிருக்கிறது. பணம் அதிகரிப்பதற்கு ஏற்றவண்ணம் தர்ம அமைப்பு எதுவும் இங்கு இல்லை. விதியின் வினையால் இந்த புண்ணிய தலத்தில் வந்து சேரும் அனாதைகளின் பாதுகாப்பிற்கு அதிகாரிகள் எதுவுமே செய்வதில்லை. அனைத்தையும் கடவுள் பார்த்துக் கொள்வார் என்றவொரு நழுவல் சிந்தனையுடன்தான் அதிகாரிகள் நடந்துகொள்கின்றனர்.

கடந்த அறுபது வருடங்களாக இங்கு நடந்து கொண்டிருக்கும் பல சம்பவங்களுக்கு ஒரு சாட்சியாக இருக்கிறேன். எந்த பக்கமும் சார்ந்திராத சாட்சி.... ஃபீஸ் கட்ட வேண்டியதில்லாத சாட்சி....

பாட்டி மரணமடைந்து நேரத்தோடு நேரம் சேர்ந்துகொண்டிருக்கிறது. உடனடியாக இந்த விஷயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் வண்டியுடன் வந்து பிணத்தை நகர சுடுகாட்டிற்கோ கடற்கரைக்கோ அடக்கம் செய்வதற்காகக் கொண்டு செல்வார்கள். அதுவரை பாட்டியின் நிகழ்காலமும் கடந்த காலமும் மக்களுக்கு ஒரு பேசப்படும் விஷய மாக இருக்கும்.

மக்கள் என்று கூறுவதாக இருந்தால், கோவில் பகுதியில் இருக்கக்கூடிய பிச்சைக்காரர்களும் அனாதைகளும் தொழில் இல்லாமல் அலைந்து கொண்டிருக்கும் நபர்களும்.... ஆலயத்தின் குளத்தைச் சுற்றி வசித்துக் கொண்டிருக்கும் மனிதர்கள்... அவர்களில் சாதாரண நிலையில் இருப்பவர் களுக்கு இது ஒரு பிரச்சினையே இல்லை. இறந்து கிடப்பவர்களின் உடல்களைப் பார்த்து வெறுப்பு நிலையில் இருக்கும் மனிதர்கள் சிந்திப்பதே இல்லை.

ஆனால், சொந்த நிலையாலும் நரக வாழ்க்கை யின் வேதனைகளைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் காரணத்தாலும் கடவுளின் சாட்சியாக இருப்பதாலும் அந்த இடத்திலிருந்து திடீரென ஓடி மறையமுடியவில்லை.

சொந்த வாழ்க்கையைப் பற்றி ஒரு ஆராய்ச்சி நடத்திப் பார்ப்பதற்கான துணிச்சல் உண்டாகவில்லை.

பாட்டிக்கு எழுபத்தைந்து.... எண்பது வயதாவது இருக்கும். வயது அதிகமாக ஆகியிருந்தாலும், முகத்திலிருந்து பிரகாசம் மறைந்து போய்விடவில்லை.

மரணமடைந்த பாட்டி மிகவும் பெருமையுடன் தன் விருப்பப்படி வாழ்ந்த நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவளாக இருக்க வேண்டும் என்று நினைப்பதற்கு நிறைய காரணங்கள் இருந்தன. இறந்து கிடக்கும்போதும், பாட்டி வெளுத்த ரவிக்கையையும் அழுக்கற்ற ஆடைகளையும் அணிந்திருந்தாள். வாயில் அனைத்து பற்களும் இல்லாவிட்டாலும், இருந்த பற்களுக்கு கூறும் அளவிற்கு சேதங்கள் உண்டாகவில்லை. பற்களைத் துலக்குவதற்கு பற்பசையையும் ப்ரஷ்ஷையும் பயன்படுத்தினாள். பாட்டியின் ப்ளாஸ்டிக் கூடையிலிருந்த ப்ரஷ்ஷும் பற்பசையும் என்னை ஆச்சரியப்பட வைத்தன. ப்ளாஸ்டிக் கூடையும் பெரிய ஒரு கோணி மூட்டையும்.... இவைதாம் பாட்டியின் சம்பாத்தியம்.

ப்ளாஸ்டிக் கூடையிலிருந்த பொருட்கள் ஒவ்வொன்றும் வெளிப்படையாக பக்தர்களும் அங்கு வருபவர்களும் பார்க்கக் கூடியவைதான். எண்ணி கணக்கு பார்க்கக் கூடியதுதான்....

கோணி மூட்டையில் என்னவெல்லாம் இருக்கும் என்பதை நினைக்க மட்டுமே முடியும். அனைத்து அசையாத, அசையும் பொருட்களும் அதற்குள் இருக்க வேண்டும். அந்த மூட்டைக்குள் பாதுகாத்து வைத்திருக்கும் பொருட்களிலிருந்து பாட்டியின் வாழ்க்கையைப் பற்றிய ஏதாவது ஆதாரங்கள் கிடைக்கலாம்.

பாவம்! பாட்டி எந்த ஊரைச் சேர்ந்தவள் என்பதையோ, எந்த குடும்பத்தில் பிறந்தவள் என்பதையோ, எந்த ஜாதியைச் சேர்ந்தவள் என்பதையோ, உறவினர்களென யாரெல்லாம் உயிருடன் இருக்கிறார்கள் என்பதையோ தெரிந்து கொள்ள முடியாத நிலை...

சாக்கு மூட்டையை அவிழ்த்து சோதித்துப் பார்த்தால், பல ஆதாரங்களும் ரகசியங்களும் கிடைக்கலாம்.

குளத்தின் கரையில் இறந்து கிடக்கும் பாட்டியின் இறந்த உடலின் கழுத்துப் பகுதி வரை ஒரு வெண்ணிற துணியால் மூடப்பட்டிருந்தது. ஏதோ இரக்க மனம் படைத்த மனிதரின் அன்பளிப்பாக இருக்க வேண்டும். சலவை செய்து வெண்மையாக ஆக்கப்பட்ட வேட்டி...

நகராட்சிக்குச் சொந்தமான பிண வண்டி வர இருக்கிறது என்ற தகவல் கிடைத்தது.

பாட்டி நிறைய தலைமுடியைக் கொண்ட பெண்ணாக இருக்க வேண்டும்.இந்த வயதிலும் தலையில் நிறைய முடி இருந்தது. நரைத்து வெளுத்த தலைமுடி...

காதிலும் கழுத்திலும் ஏதோ ஒரு காலத்தில் நகைகள் அணிந்திருந்த தழும்பு இருந்தது.

கடந்த சில வருடங்களாக பெரும்பாலான நாட்களில் பார்த்த பாட்டியின் தோற்றமும் செயல்களும் என் மனதில் வலம் வந்தன.

அனைவரும் இருந்தாலும், யாருமே தன்னைத் திரும்பிக்கூட பார்ப்பதில்லை என்று அவ்வப்போது குறைப்பட்டுக் கொண்டிருந்த.... பேரமைதியுடன் முணுமுணுத்துக் கொண்டிருந்த பாட்டி...

என்ன காரணத்தாலோ... எனக்கு அவளின் மீது ஒரு தனித்தன்மை கொண்ட இரக்கம் உண்டானது.

பாக்கெட்டில் காசு இருக்கும் நேரமாக இருந்தால், ஒன்றோ இரண்டோ ரூபாய்களைக் கொடுத்து, அவளின் சோகம் நிறைந்த கண்களில் வெளிப்படும் உணர்வுகளையே பார்த்துக் கொண்டிருப்பேன். காசுக்காக என்னை நோக்கி அவள் கையை நீட்டியதில்லை. கையை நீட்டாமலே நான் அவளுக்கு விசேஷ நாட்களில் சோறு வாங்கி சாப்பிடுவதற்கான காசைக் கொடுப்பேன்.

சிங்க மாதத்தில் வரும் திருவோணம், விஷு, திருவாதிரை, அஷ்டமி ரோகிணி, என் பிறந்த நாள்... இந்த விசேஷ நாட்களிலெல்லாம் பாட்டிக்கு ஏதாவது அன்பளிப்பை அளித்து, அவளுடைய சந்தோஷத்தைப் பார்த்து மனம் குளிர்வது என்பது என்னுடைய வழக்கமான செயலாக இருந்தது.

பிண வண்டி வந்தது. துணியைக் கொண்டு முகத்தை இறுக மூடிக் கொண்டார்கள். அங்கு கூடி நின்றிருந்த அனாதைகள் பாட்டியின் இறந்த உடலைப் பிண வண்டியில் எடுத்து படுக்கவைத்தனர். 

பிண வண்டிக்குப் பின்னால் யாருமே சுடுகாட்டிற்குச் செல்லவில்லை.